அன்புள்ள பாக்கெட் நாவல் எழுத்தாளர்களுக்கு வணக்கம். நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இருக்கும் கேள்விகளில் ஒன்று நாவல்களை எப்படி விரிவாக எழுதுவது என்பது தான்! அதுவும் வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாமல் ஒரு நீண்ட நாவலை எழுதுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.
நீண்ட நாவல்களை எழுதுவது எதற்காக?
பா க்கெட் நாவலில் பெரும்பாலும் சிறு கதைகளை விடப் பெரிய நாவல்களையே வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். மேலும் நீங்கள் நீண்ட நாவல்களை எழுதும் போது அந்தக் கதையின் கதாப்பாத்திரங்கள் மற்றும் கதையின் கருத்து வாசகர் மனதில் ஆழமாக பதியும். தவிர, நீங்கள் தேர்வு செய்யும் கதைக்களம் சற்று அழுத்தமானதாக இருந்தால் அது வாசகர்களை எளிதில் கவரும்.
சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பு
நீண்ட நாவல் எழுத வேண்டும் என்றாலே எல்லாருக்கும் சிறு தயக்கம் இருக்கும். அதாவது வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தக்கூடாது. அதற்கு ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சஸ்பென்ஸ் அல்லது ஏதாவது ஒரு எதிர்ப்பார்ப்பை வாசகர்களுக்கு உருவாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் அடுத்த அத்தியாயத்தைக் காத்திருந்து படிப்பார்கள். கதை விறுவிறுப்பாகச் செல்லும் பட்சத்தில் நீங்கள் எவ்வளவு பெரிதாக எழுதினாலும் வாசகர்கள் நிச்சயம் படிப்பார்கள். எங்கே கதை முடிந்துவிடுமோ என்ற ஏக்கம் கூட வாசகர்களுக்கு ஏற்படுவதுண்டு. வாசகர்களின் கற்பனைத் திறனுக்கு அதிகமாக நம்முடைய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். அவர்களின் எதிர்ப்பார்ப்பைத் தாண்டி நாம் நம்முடைய கதையை அவர்களுக்கு தர வேண்டும். அதிக வார்த்தைகள் இருந்தால் வாசகர்கள் படிக்க மாட்டார்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை.
கதாப்பாத்திரங்களின் பங்களிப்பு
ஒரு நாவல் என்று எடுத்துக் கொண்டால் அதில் முக்கிய பங்கு கதாப்பாத்திரங்களுக்கு உண்டு. நீங்கள் குறுகிய நாவல் எழுதும் போது கதாநாயகன் மற்றும் நாயகியை மட்டுமே வைத்து கதையை கொண்டு போகலாம். ஆனால், நீங்கள் நீண்ட நாவல் எழுத வேண்டும் என்றால் முன்னணி கதாப்பாத்திரங்களைத் தாண்டி மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் சற்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக இடையில் இருந்து எல்லா கதாப்பாத்திரத்தையும் உருவாக்க கூடாது. முடிந்த அளவுக்கு நீங்கள் கதையை ஆரம்பிக்கும் போதே, சில கதாப்பாத்திரங்கள் இருப்பது போல் காட்சிப்படுத்த வேண்டும். பின் அவர்களின் தேவை வரும் போது, அவர்களைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கொள்ளலாம்.
வாசகர்களின் எதிர்பார்ப்பு
எல்லா கதைகளின் வெற்றியுமே எழுத்தாளரை மட்டுமல்ல வாசகர்களையும் சார்ந்தது. அதனால் உங்கள் கதையில் வாசகர்களுக்கு என்ன தேவையோ அவர்கள் எந்தக் கதாப்பாத்திரத்திற்கு முன்னுரிமை கேட்கிறார்களோ அதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களை அழுத்தமாக காண்பிக்க வேண்டும். அப்போது தான் வாசகர்கள் மத்தியில் அந்த கதைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் சொல்ல வரும் கருத்துகளையும் நாம் கேட்க வேண்டும். அதற்காக அவர்கள் கேட்பதை மட்டுமே கொடுக்காமல் அவர்கள் எதிர்ப்பார்க்காத சுவாரசியமான சில திருப்பங்களையும் கதையில் கொண்டு வர வேண்டும்.
நீண்ட நாவல்களை எழுதும்போது தவிர்க்க வேண்டியவை
கதையின் கருவை மாற்றாமல் கதையை நகர்த்த வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு கதை ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு, கதை நகர்வில் அதற்கு நேர்மாறாக எதையும் சொல்லிவிடக்கூடாது. அது கதையைப் பற்றிய தவறான புரிதலுக்கு வழி வகுக்கும். புதிய கதாப்பாத்திரங்கள் கொண்டு வரலாம். ஆனால், பத்து அத்தியாயத்துக்கு ஒரு புதிய கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தினால் அது வாசகர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தும். பின் முடிந்த அளவுக்கு, ஏற்கனவே கூறிய காட்சிகள் திரும்பவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நினைவு கூர்தல்
பொதுவாகவே எழுத்தாளர்களை விட வாசகர்கள் நம் கதையோடு நன்கு பயணிப்பார்கள். அதனால் நீங்கள் மறந்த சில விசயங்கள் கூட அவர்கள் உங்களுக்கு நினைவுப் படுத்தும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் நீங்களே சில கதாப்பாத்திரங்களை மறந்திருப்பீர்கள். அதிலும் குறிப்பாக பிளாஸ்பேக் பற்றி! அதுவும் முக்கிய பிளாஸ்பேக் என்றால் நீங்கள் அதில் சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவுக்கு வாசகர்களின் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்திட வேண்டும். அதன் பின் அடிக்கடி பிளாஸ்பேக் என்று செல்வதை விட அதைச் சொல்லும் போதே ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து தெளிவாக சொல்லிவிடுவது நல்லது. அதிலும் ஹீரோ மற்றும் ஹீரோயின் சம்பந்தமான எந்த நிகழ்வையும் மறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வில்லன் மற்றும் வில்லியின் பங்களிப்பு
ஒரு கதை என்றாலே அதில் ஹீரோ மற்றும் ஹீரோயினைத் தாண்டி முக்கிய இடம் வகிப்பது அக்கதையின் எதிர்மறைப் பாத்திரங்களான வில்லன் மற்றும் வில்லி கதாப்பாத்திரங்கள். வில்லனை மிகவும் பலசாலியாகக் காண்பிக்க வேண்டும். அப்போது தான் ஹீரோ மற்றும் ஹீரோயின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். எப்போதுமே சந்தோஷமாக செல்லும் கதைகளை விட பல பிரச்சனைகளை கடந்து அவர்கள் சேரும் போதோ இல்லை வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதோ வாசகர்களுக்கு அது ஒரு தனி திருப்தியை கொடுக்கும். அதற்காக எப்போது பார்த்தாலும் டிவிஸ்ட் மட்டுமே கொடுக்காமல் இடை இடையில் மகிழ்ச்சியான காட்சிகளையும் கொடுக்க வேண்டும். ஹீரோ மட்டுமே ஜெயித்துக் கொண்டிருந்தாலும் வில்லன் மீது வாசகர்களுக்கு பெரிய பயமோ, பெரிய கருத்தோ இருக்காது. அதனால், ஹீரோ மற்றும் வில்லன் இருவருக்குமே ஓரளவுக்கு சரி சமமான பங்களிப்பு இருப்பது நல்லது.
பாக்கெட் நாவலில், தொடர் கதைக்கான மதிப்பு
மற்ற செயலிகளை விட பாக்கெட் நாவலில் நீங்கள் நீண்ட நாவல்களை எழுதுவதன் மூலம் நீங்கள் எண்ணற்ற பலன்களை அடையலாம். நீங்கள் தினமும் எழுதுவதன் மூலம் உங்கள் கதை எங்கள் செயலியில் ட்ரென்டிங் நாவல் மற்றும் பாப்புலர் நாவல் பிரிவில் முன்னதாக இருக்கும். அதனால் உங்கள் நாவல்கள் எளிதாக வாசகர்களைச் சென்று சேரும். வாசகர்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு உங்கள் மீதும், எங்கள் செயலியின் மீதும் நம்பிக்கை அதிகமாகும். அது போக பாக்கெட் நாவலில் நீண்ட நாவல்களை எழுதுவதன் மூலம் உங்கள் நாவல் ஆடியோ-வாக பாக்கெட் எப்.எம். செயலியில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலே கூறிய கருத்துகள் எல்லாம் உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும் நீண்ட நாவல்களை எழுதுவதன் மூலம் உங்களின் எழுத்துத் திறமை மற்றும் கற்பனைத் திறன் நிச்சயமாக அதிகரிக்கும். இதுவரை நீங்க எழுத முயற்சி செய்யாவிட்டால் இப்போதே முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக எங்கள் செயலி உங்கள் திறமையை உலகிற்குக் காண்பிக்கும் ஒரு கருவியாக இருக்கும்.
அன்புடன் பாக்கெட் நாவல் குழுமம்.