காதல் கதைகளுக்கான அடிப்படைகள்!

காதல்

மனித வாழ்க்கையில் எப்போதும் எல்லோராலும் விரும்பப்படும் ஒன்று காதல் தான். தன் வாழ்வில் காதலைக் கடந்து வராத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. காதலைப் பற்றிப் பேசுவதற்கும், படிப்பதற்கும் எப்போதும் மனம் விரும்பிக் கொண்டே தான் இருக்கிறது. உலகில் சொல்லப்படும் பெரும்பாலான கதைகள் காதலைப் பற்றித்தான் சொல்லப்படுகின்றன. மனித வாழ்வென்பது காதலை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய காதல் கதைகளை எழுதுவதற்கான அடிப்படைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

காதல் கதைக்கான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்தல்

காதல் கதைகளை எழுதுவதென்று முடிவானவுடன் எந்த மாதிரியான கதையாக எழுத விரும்புகிறீர்கள் என்பதை முதலில் தெரிவு செய்து கொள்ளுங்கள். ராமன் – சீதை போன்ற புராண காலத்தில் நடக்கும் காதலாக இருக்கலாம். அல்லது யாயும் ஞாயும் யாரகியரோ என்ற சங்ககாலக் காதலாக இருக்கலாம். ஃபேண்டசி உலகில் நடைபெறும் காதலாக இருக்கலாம். வரலாற்றுப் பிண்ணனி கொண்ட ரொமான்ஸ் நாவலாக இருக்கலாம். நம் சமகாலத்தில் நாம் சந்தித்த கதைகளை மையப்படுத்தி உருவாக்கலாம். இப்படிப் பல்வேறுபட்ட கதைக்களங்களில் உங்கள் மனதில் இருக்கும் கதைக்கு எது பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுத்து அதிலிருந்து துவங்கலாம்.

கதாநாயகர்கள்

காதல் கதைகள் எழுதப் போகிறோம் என்றதும் யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்ற அறிமுகம் மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். பல்வேறு கதாப்பாத்திரங்கள் நம் கதைகளில் வரலாம். கதாநாயகனையும் கதாநாயகியையும் சிறப்பாக அறிமுகம் செய்வது வாசகர்கள் எளிதில் அந்தப் பாத்திரங்களுடன் இணைந்து பயணிக்கு உதவும். இருவருக்குமான குணாதிசயங்கள் என்னென்ன என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே வருவது அவசியம். இதன் மூலமாக இருவரின் குணங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். அல்லது முற்றிலும் மாறுபட்ட குணம் கொண்டவர்களாக அறிமுகப்படுத்தினால் எப்படி இவர்கள் காதலில் இணையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை வாசகர்களிடம் உருவாக்க முடியும்.

பிரச்சினைகள்

ரொமான்ஸ் கதைகளைச் சுவாரஸ்யமாக்க அந்தக் காதலில் வலுவான சிக்கல்களை உருவாக்க வேண்டும். அந்தப் பிரச்சினைகளைத் தாண்டி எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற கேள்விக்கான பதிலாக அடுத்தடுத்து நாவலை வளர்த்துச் செல்லலாம். சில காதல்களில் காதலைச் சொல்வதே பிரச்சினையாக இருக்கும். யார் முதலில் காதலைச் சொல்வது என்பதில் ஆரம்பித்து பல்வேறு சிக்கல்களைக் கதையில் சேர்க்கலாம். அதன் மூலமாக ஒவ்வொரு பிரச்சினைக்குமான தீர்வினை எவ்வாறாக அவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று வாசகர்களின் ஆர்வத்தைக் கூட்டலாம்.

முக்கோணக் காதல்

முக்கோணக் காதல் கதைகளையும் பெரும்பாலான வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். ஒரே குழுவில் நண்பர்களாக இருக்கும் ஒருவர் மீது இரண்டு நபர்கள் காதலில் விழுவது பல்வேறு திரைப்படங்களில் நாம் பார்த்து ரசித்த கதைகள் தான். நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்களுக்குள் ஏற்படும் முக்கோணக் காதல் அவர்களது நட்பில், உறவில் எந்த மாதிரியான விரிசல்களை ஏற்படுத்தியது என்று கதையை நகர்த்திச் செல்லலாம். தன் மற்றொரு நண்பனுக்காகத் தனது காதலை மறைத்துக் கொண்டு, அவர்களது காதலுக்கு உதவும் நண்பனின் பாத்திரத்தின் மூலமாக செண்டிமெண்ட் காட்சிகளையும் உருவாக்கலாம்.

நண்பர்கள் மற்றும் நகைச்சுவை

காதலிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது நண்பர்களுடன் செய்யும் பல்வேறு கலாட்டாக்களைப் பற்றி நகைச்சுவையாக எழுதலாம். நம் அன்றாடம் பார்க்கும் பெரும்பாலான நிகழ்வுகள் இதனுடன் பொருந்திப் போவதால் நிச்சயமாக சுவாரஸ்யமாக அவற்றை எழுத முடியும். இதைத் தவிர காதலை வெளிப்படுத்துவதற்காகச் செய்த சாகசங்களைப் பற்றியும் கிண்டல் கலந்து எழுதலாம். காதலுக்காகச் செய்த சில அசட்டுத் தனங்களைப் பற்றி எழுதுவதன் மூலமாக நகைச்சுவையாகவும் நாவலைக் கொண்டு செல்லலாம்.

மகிழ்ச்சிகரமான முடிவு

ரொமான்ஸ் நாவல்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமான முடிவுகளையே வாசகர்கள் விரும்புகிறார்கள். கதைப் போக்கில் ஆயிரம் சிக்கல்களும், பிரச்சினைகளும் வந்திருந்தாலும் கதையின் முடிவில் காதலனும் காதலியும் இணைந்துவிடுவதாக கதையை முடிக்க வேண்டும். சில கதைகளுக்கு சோகமான முடிவுகள் இருக்கலாம் என்றாலும் பெரும்பாலும் அனைவரும் விரும்பும் வகையிலான முடிவாக இருப்பதே வாசகர்களைக் கவரும்.

பெரும்பாலான வாசகர்கள் விரும்பிப் படிப்பது ரொமான்ஸ் கதைகளைத் தான். அதிக அளவில் எழுதப்படுவதும் காதல் கதைகள் தான். ஏனென்றால் காதல் இல்லாத இடமோ மனமோ இல்லை. காதல் கதைகளுடன் மட்டும் தான் எல்லோராலும் மிக எளிதாகத் தங்களது வாழ்க்கையை இணைத்துக் கொள்ள முடியும். தாங்கள் தவறிவிட்ட காதலைப் பற்றியோ அல்லது கற்பனை செய்திருந்த காதலைப் பற்றியோ ஒரு நாவல் பேசுவதால் இயல்பாகவே அதனைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது.

காதல் நாவல்களை எழுத விரும்பம் இருந்தும் எங்கிருந்து அதனைத் துவங்குவது என்ற குழப்பத்திற்கு இந்தக் கட்டுரை ஓரளவு விடை தந்திருக்கும் என்று கருதுகிறோம். பாக்கெட் நாவல் தளத்திலும் பெரும்பாலான வாசகர்கள் விரும்பிப் படிப்பது ரொமான்ஸ் நாவல்களைத் தான். அதிகப்படியான வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு மிகச் சிறந்த காதல் கதையை பாக்கெட் நாவல் தளத்தில் எழுத வாழ்த்துகிறோம்.

அன்புடன்

பாக்கெட் நாவல் குழு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *