திகில் கதை எழுத விருப்பமா?

திகில் கதை

திகில் கதை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? மனதிற்குள் திக் திக்கென்று பயம் சூழ்ந்திருக்க மரண பீதியோடு திகில் கதைகளை வாசிக்க விரும்புகிறவர்கள் இருக்க தானே செய்கிறார்கள்!  திகில் கதைகளுக்கு அதிக வாசகர்கள் இருக்கும் பொழுது அவர்கள் விரும்பும் மாதிரியான திகில் கதைகளைக் கொடுக்க எழுத்தாளர்களும் முயற்சித்தல் அவசியம் தானே? இந்த கட்டுரையில் திகில் கதைகள் எழுதும்போது எழுத்தாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றும், திகில் கதைகளில் வாசகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றும் காண்போம்.

திகில் கதை எழுத கதைக்களம் அமைத்தல்

எந்த ஒரு வகையில் கதை எழுதினாலும் கதைகளம் அமைத்தல் என்பது அடிப்படையான ஒன்று. அதிலும் திகில் கதையை எழுத நீங்கள் முடிவு செய்து விட்டால் நிச்சயம் கதைகளத்தை முடிவு செய்து விட்டு கதையை ஆரம்பித்தல் அவசியம். திகில் கதை நீங்கள் எழுதப் போகும் கதையில் வாசகர்களை மிரள வைக்க என்ன செய்ய போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெளிவாக முடிவு செய்து வைத்தல் கதையைச் சரியான திசையில் கொண்டு செல்ல உதவும்.

கதையின் தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்

ஒரு முழு கதையை எழுதுவதைக் காட்டிலும் எழுத்தாளரை அசதியாக்கும் பகுதி என்னவென்றால் கதையின் தலைப்பை தேர்ந்தெடுப்பது தான். ஆனால், ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்… வாசகர்கள் உங்களின் கதையை நோக்கி வர ஆரம்பிக்கும் ஆரம்ப புள்ளியே கதையின் தலைப்பு தான். கதைக்குப் பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல வாசகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக கதைக்கு பொருத்தமே இல்லாத தலைப்பை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டியதும் முக்கியமே. உங்களின் கதை யாருக்கு சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த வகையினரை ஈர்க்கும் அளவுக்கு கதைக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தடுத்தல் அவசியம்.

திகில் கதை கதைக்கான இடமும் காலமும்

கதை நடைபெறும் இடம் உங்களின் கற்பனையாக இருந்தாலும் சரி, நிஜத்தில் இருக்கும் இடமாக இருந்தாலும் சரி, முதலில் வாசகர்கள் கதை நடைபெறும் இடத்தை தெளிவாக புரிந்து கொள்ளும் அளவுக்கு சரியான அளவில் சரியான முறையில் விளக்கத்தை கொடுத்தல் அவசியம். அதே போல் கதை நடைபெறும் காலத்தையும் ஆரம்பத்திலேயே வாசகர்களுக்கு விளக்குதலும் முக்கியமே. கதைக்குள் வாசகர்கள் இணைந்திருக்க அவர்கள் முதலில் கதை நடைபெறும் இடத்தையும் காலத்தையும் உணர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

கதாபாத்திரங்கள்

கதையை உயிருள்ளதாக மாற்றப் போவது நீங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் தான். கதாபாத்திரங்களைச் சரியான முறையில் கட்டமைக்கும் போது தான் வாசகர்கள் விரும்பும் கதையாக உங்கள் கதை உருமாறும். அதே போல் கதாபாத்திரங்களின் பெயரை தேர்வு செய்வதிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வித்தியாசமான பெயரை வைக்கிறேன் என்று வாசகர்கள் மனதில் பதியாத பெயரை தேர்ந்தெடுப்பதை தவிர்க்கலாம். கதையின் ஸ்வாரசியத்திற்காக சில கதாபாத்திரங்களின் குணாதிசியத்தை முழுமையாக கட்டவிழ்க்காமல் இருக்கலாம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு கதாப்பாத்திரத்தின் குணாதிசியத்தில் மாற்றத்தைக் கொண்டு வரலாம், அதே நேரத்தில் அடிக்கடி கதாபாத்திரத்தின் குணத்தை மாற்றி காட்டுவது வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி கதையின் மீது எதிர்மறையான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

கதையின் போக்கு

திகில் கதை என்றாலே அடுத்து நடக்க போவது என்னவென்ற எதிர்பார்ப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்துவது தான். அப்படி ஆர்வத்தை தூண்டும் விதமாக மர்ம முடிச்சிகளோடு கதையை நகர்த்தலாம், அதே சமயம் ஒரு மர்மத்தை மட்டுமே நோக்கி முழு கதையையும் நகர்த்தும் பொழுது வாசகர்களுக்கு சலிப்பை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. கதையின் போக்கில் ஒரு மர்ம முடிச்சை அவிழ்க்கும் பொழுது மற்றொரு மர்மத்தை உருவாக்கலாம், அது கதையைச் சலிப்பில்லாமல் நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல உதவும். இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லியாக வேண்டும். கதையில் ட்விஸ்ட் வைப்பது கதையை மேலும் ஸ்வாரசியமாக்கும் தான், அதற்காக அடிக்கடி ட்விஸ்ட் வைப்பதோ, வாசகர்கள் எதிர்ப்பார்க்காத ட்விஸ்டை கொடுக்க நினைத்து கதைக்கு சம்மந்தமில்லாத பாதையில் கதையை நகர்த்துவதோ கூடாது.

லாஜிக்கா மேஜிக்கா?

கதையை எந்தக் கோணத்தில் நகர்த்த போகிறீர்கள் என்கிற தெளிவு எழுத்தாளருக்கு இருத்தல் அவசியம், ஒருவேளை கதையை உங்களின் கற்பனை உலக்கத்தில் தான் கொண்டு செல்ல போகிறீர்கள் என்றால் லாஜிக் என்பது பெரிதாக தேவைபடாது, ஆனால் நடைமுறை வாழ்கையில் இருப்பது போல கதையை எழுத நினைத்தால் அதற்கேற்ப லாஜிக்கோடு கதை எழுதுவது அவசியம். அதே சமயம் கற்பனை உலகம், நிஜ உலகம் என்று இரண்டையும் கதைக்குள் காட்ட போகிறீர்கள் என்றால் அதை தெளிவான முறையில் வாசகர்களுக்கு புரிய வைத்தல் சவால் நிறைந்த முக்கியமான பகுதியாகும்.

பேய் கதையா மர்மக் கதையா?

திகில் கதை என்றாலே பேய்களுக்கும், அமானுஷ்ய சக்திகளுக்கும் இடம் இருக்கும் கதையாக உருவாக்கலாம். பேய்கள் என்றால் நாம் அன்றாடம் படிக்கும், திரைப்படங்களில் பார்க்கும் வகையிலான கதைகளாகவே இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பேய்களில் இருக்கும் எத்தனையோ வகையான பேய்களைப் பற்றி எழுதலாம். நாமே புதிதாக ஒரு பேயைக் கூட உருவாக்கலாம். அந்தப் பேய் என்னவிதமான சக்தியுடையது என்றும் நாமே ஒரு உலகத்தை உருவாக்கலாம். கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் அவற்றை எப்படி முறியடிக்கப் போகிறார்கள் என்று வாசகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டலாம். பேய் தவிர பிற அமானுஷ்ய சக்திகளைப் பற்றியும் எழுதலாம். எல்லாமே முழுக்க முழுக்க கற்பனையான கதைகள் என்பதால் நம் மனம் விரும்பியபடி அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மிரட்டலாம். ஆனால், அவை எல்லாம் ஏதோ ஒரு லாஜிக்கிற்குள் கட்டாயமாகப் பொருந்திவருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வார்த்தைத் தேர்வு

திகில் கதையில் வாசகர்களைப் பயத்தின் உச்சிக்கு கொண்டு செல்ல வார்த்தையிலும் விளையாட முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப உபயோகிக்கும் வார்த்தைகள் தான் வாசகரை சீட்டின் நுனிக்கு கொண்டு செல்லும். அடுத்து என்ன நடக்க போகிறது என்று வாசகரை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் துருப்பு சீட்டு வார்த்தைகள் தான். அதற்காக வாசகருக்கு புரியாத கடினமான வார்த்தையை பயன்படுத்த கூடாது, எளிமையான வார்த்தைகள் மூலம் சூழ்நிலையை விவரிக்கலாம்.

வாசகர்களின் எதிர்பார்ப்பு

திகில் கதையில் வாசகர்கள் எதிர்பார்ப்பது தாங்கள் படிக்கும் கதை புதுவித அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பது தான். கதையை படிக்கும் நேரத்தில் நிஜ உலகை விட்டு நீங்கள் காட்டிய மர்ம உலகில் பயமும் பீதியுமாக இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரத்தில் கதையை படித்து முடித்ததும் குழப்பம் இல்லாத திருப்தி உணர்வை எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டாலே வாசகர்கள் மனதில் உங்களின் கதை தனி இடத்தை பிடித்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கதையின் வெற்றி

ஒருவழியாக கட்டுரையின் இறுதி பாகத்திற்கு வந்து விட்டோம். எழுத்தாளர்களே! நீங்கள் எழுதும் கதை வாசகர்கள் மத்தியில் வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மேலே கூறிய வழிமுறைகளை எல்லாம் படித்து விட்டு கதை எழுத ஆரம்பிப்பது தான். கதையை ஆரம்பிப்பதை விட தொடர்ந்து எழுதுவது தான் உங்கள் கதை வெற்றி காண முதல் படியாக அமையும். நீங்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் வாசகர்களை புது உலகத்தில் வாழ வைக்க போகிறது என்பதை மறந்து விடாதீர்கள். படைத்தல் திறமையை பெற்றுள்ள நீங்கள் பல தரமான படைப்புகளை வாசகர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம், வாழ்த்துகிறோம், நன்றி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *